வெள்ளி, 30 மார்ச், 2018

பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசை

ராமேஸ்வரம் முருகன் கோயிலில், பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தி, சுவாமி
தரிசனம்செய்தனர்.
 
மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமை இருப்பதாக நம்பிக்கை. 12-வது மாதமான பங்குனியும், 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் திருநாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வானையை மணம் முடித்ததாகவும், இந்த நாளில்தான் இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நாளில், நாடெங்கிலும் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களுக்கும் பக்தர்கள் பால், வேல், மயில், பறவைக் காவடி எனப் பலவகையான காவடிகளை எடுத்துச்சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் மேற்கு வாசலில் அமைந்துள்ள முருகன் கோயிலில், இன்று பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடந்தது. ராமேஸ்வரத்தைச் சுற்றியுள்ள நடராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், கரையூர், பருவதம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள், இன்று அதிகாலை 3 மணியிலிருந்து பல்வேறு காவடிகளை எடுத்துவந்து முருகன் சந்நிதியில் செலுத்தினர்.
இதையொட்டி, ராமேஸ்வரம் அகில இந்திய யாத்திரைப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கோயிலின் அனுப்பு மண்டபத்தில் உள்ள ஶ்ரீ முருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 1008 சங்கு அபிஷேகமும் நடைபெற்றது.  ராமேஸ்வரம் கோயில் ரத வீதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, காவடி எடுத்துச்செல்லும் பக்தர்களுக்கு வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. மேலும், வெயிலின் தாக்கத்தைப் போக்கும் வகையில் பல்வேறு அமைப்புகள், சங்கங்கள் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர், பானகம் உள்ளிட்ட நீர் பானங்கள் வழங்கப்பட்டன.