செவ்வாய், 1 மே, 2018

சித்ரா பௌர்ணமி முடிந்த இரண்டாம் நாளில் உள்வாங்கிய கடல் நீர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  கோயில் கடற்கரையில் கடல் நீர் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

முருகப் பெருமானின்அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயில். கடற்கரையை ஒட்டி இருக்கும் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் சாதாரண நாள்களிலும் நிரம்பி வழியும். தற்போது, கோடை விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள், சுற்றுலாவாக வந்து செல்கின்றனர். திருச்செந்துார் கோயிலுக்கு வருபவர்கள் முதலில் கடலில் குளித்த பின், நாழிக் கிணற்றில் குளித்த பிறகே, கோயிலுக்குள் செல்வர். கடந்த, 2004-ம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய சுனாமி சோகத்தின்போது, திருச்செந்துாரில் மட்டும் அலைகள் அடங்கி, கடல் உள் வாங்கியது.
வங்கக்கடலில் இந்தப் பகுதியிலிருந்து இலங்கை வரையில், பல தீவுக் கூட்டங்கள் இருப்பதால் சுனாமி  அலைகளின் தாக்கத்தை அவை குறைத்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. கடந்த 21-ம் தேதியிலிருந்து 2 நாள்களுக்கு வங்கக்கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிட்டது. அப்போது, கடல் உள்வாங்கலாம் என்று கருதி திருச்செந்துார் கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், சீற்றம் ஏதுமின்றி கடல் இயல்பாகவே காணப்பட்டது.
ஒவ்வொரு அமாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களிலும் இக்கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாகக் காணப்படும். இந்த நாள்களில் சில மணி நேரம் இக்கடல் உள்வாங்கிக் காணப்படுவது வழக்கம். இந்நிலையில், சித்திரா பெளர்ணமி முடிந்த இரண்டாம் நாளான இன்று (1.5.2018) பகல் 11.30 மணியளவில், திருச்செந்துார் கடல் நீர் திடீரென உள்வாங்கியது. இதனால் பாறைகள் வெளியில் தெரியத் தொடங்கின. அப்போது பக்தர்கள் கடலில் குளித்துக்கொண்டிருந்தாலும் யாரும் அதைப் பெரிதாக  எடுத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து, பக்தர்கள் கரைக்குத் திரும்புமாறு திருக்கோயில் புறக் காவல் நிலைய போலீஸார் எச்சரித்தனர். மாலை 4 மணி அளவில்  கடல் பழைய நிலைக்குத் திரும்பியது. அதன் பிறகே, மீண்டும் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.