செவ்வாய், 10 ஏப்ரல், 2018

குற்றாலநாதசுவாமி திருக்கோயில் சித்திரை விசு திருவிழா தேரோட்டம்!

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற குற்றாலநாத சுவாமி கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும்
சித்திரை மாதம் சித்திரை விசு திருவிழா 10 நாள்கள் சிறப்பாகக்  கொண்டாடப்படும். தினமும் சுவாமி மற்றும் அம்பாளுக்குச் சிறப்பு ஆராதனை நடைபெற்று பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா செல்வார்கள். ஏப்ரல் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

குற்றாலநாதர், குழல்வாய் மொழியம்மை, விநாயகர், முருகன் ஆகியோர் நான்கு திருத்தேர்களில் மேளதாளம் முழங்க எழுந்தருளத் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர். நாளை 11-ம் தேதி காலையும் இரவும் நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனையும் 12-ம் தேதி சித்திர சபையில், நடராஜமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சார்த்தி, தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது. 14-ம் தேதி, சித்திரை விசு தீர்த்தவாரி நிகழ்ச்சியோடு திருவிழா நிறைவு பெறுகிறது.