வியாழன், 29 மார்ச், 2018

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனித் தேரோட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருள்மிகு கழுகாசல மூர்த்தி திருக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று (29.03.18) தேரோட்டம் நடைபெற்றது. நாளை (30.03.18)  திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்புப் பெற்றது அருள்மிகு கழுகாசலமுர்த்தி திருக்கோயில். இங்குள்ள மலையின் பாறையைக் குடைந்து குகைக்குள் கழுகாசல மூர்த்தியை அமைத்துள்ளதால் இது குடைவரைக் கோவில் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இதனால், மலையே இக்கோவிலுக்கு விமானமாகவும், கோபுரமாகவும் அமைந்துள்ளது. இக்கோவிலுக்குச் சுற்றுப்பிரகாரமும் கிடையாது. கோவிலைச் சுற்றி வர வேண்டுமென்றால் மலையைத்தான் சுற்றி வர வேண்டும். இங்கு பெளர்ணமி கிரிவலம் வருதல் மிகவும் சிறப்பானதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. எட்டயபுரம் அரண்மனை வாரிசுகள்தான் இக்கோவில் அறங்காவலராக உள்ளனர்.

இக்கோவிலில் உள்ள மூலவரான கழுகாசலமூர்த்தி ஒரு முகமும், ஆறு கரங்களும் கொண்டு அருள் பாலிக்கிறார். தென் இந்தியாவிலேயே முருகப் பெருமானுக்கு இம்மாதிரியான திருக்கோலம் வேறெந்த தலத்திலும் இல்லை. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரப் பெருந்திருவிழா, கடந்த (20.03.18) அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழா நாள்களில் சுவாமி – அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை  எழுந்தருளி திருவீதியுலா வருதல் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9வது நாளான இன்று (29.03.18) நடைபெற்றது. நாளை (30.03.18) சுவாமி கழுகாசலமூர்த்தி மற்றும் வள்ளி அம்பாளுக்குத் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 12-ம் நாள் பட்டினப் பிரவேசமும், 13ம் நாளான வரும் ஏப்ரல் 2ம் தேதி  மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதேபோல, தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற நவதிருப்பதி தலங்களில் 9வது தலமும், குரு ஸ்தலமுமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் திருக்கோவிலும் இன்று பங்குனித் தேரோட்டம் நடைபெற்றது.