வெள்ளி, 30 மார்ச், 2018

அரியலூரில் 23 அடி உயர முருகனுக்கு கும்பாபிஷேகம்...!

அரியலூர் அருகிலுள்ள அஸ்தினாபுரம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள 23 அடி உயர முருகன் சிலைக்கு பங்குனி உத்திரதினமான இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு `அரோகரா’ கோஷம் எழுப்பியபடியே தரிசனம் செய்தனர்.
                                     
அரியலூர் அருகேயுள்ள அஸ்தினாபுரம் கிராமத்தில் மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து 23 அடி உயரமுள்ள முருகப்பெருமான் சிலையை வடிவமைத்துள்ளனர். மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன்கோவில் அமைக்கப்பட்டுள்ள 140 அடி உயர முருகன் சிலையின்  அமைப்பைப் போலவே உள்ளது இந்த முருகனின் சிலை. கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்த இந்தப் பிரம்மாண்ட முருகன் சிலை அமைக்கும் பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தங்கமுலாம் போன்ற வண்ணம் பூசும் பணியும் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்தப் பிரமாண்ட முருகனுக்கு `பால முருகன்’ எனப் பெயர் சூட்டியுள்ளனர் பக்தர்கள்.
                                                     
 
இந்நிலையில், முருகப் பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரமான இன்று கும்பாபிஷேகம் நடத்த ஊர் மக்களால் முடிவு செய்யப்பட்டது. இதனைமுன்னிட்டு யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கின. இதில் சிவாச்சாரியார்கள் மற்றும் ஆன்மிக மெய்யன்பர்கள் ஒன்றுசேர்ந்து பன்னிரு திருமுறைகளை வாசித்து, நான்குகால பூஜைகளைச் செய்தனர். இன்றுகாலை யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டு, முருகப்பெருமானை மூன்று முறை வலம் வந்தது. இதனையடுத்து முருகப்பெருமானுக்கு சிவாச்சாரியர்கள் திருமுறை மந்திரங்களை ஓதி புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

                              
தொடர்ந்து, முருகப்பெருமானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ``கந்தா.. கடம்பா.. வேலா.. முருகா..” எனவும், ``அரோகரா..”  கோஷம் எழுப்பியும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். தமிழகத்தில் முதல்முதலாக 23 அடி உயர முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது இங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சிலையைக் காண உள்ளூர் பக்தர்கள் அஸ்தினாபுரம் நோக்கி படை எடுத்துள்ளனர்