வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

ஆலயங்களும் சமூக மையமாகத் தொழிற்பட வேண்டும் .முன்னுதாரணம் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி

சிவத்தமிழ்ச் செல்வி அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி தலைவராக இருந்த காலத்தில் ஆலயங்கள் எவ்வாறு சமூக மையமாகத் தொழிற்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமான வகையில் உலகமெங்கும் பரந்து வாழும் சைவப் பெருமக்கள் பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஆலயமாக தெல்லிப்பழைத் துர்க்கா தேவி ஆலயத்தை மிளிர வைத்து நிர்வகித்தார். அன்னையின் தூர நோக்கை அடிப்படையாகக் கொண்டு
தற்போது ஆலயத் தலைவராகக் காணப்படும் ஆறுதிருமுருகன் அல்லும் பகலும் பல பணிகளை ஆற்றி வருவது அம்மையார் செயல் திறனும், ஆளுமையும் மிக்க ஒருவரைத் தேர்ந்தெடுத்துப் பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளமைக்குத் தக்க சான்று. சிவத்தமிழ்ச் செல்வியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அறப் பணிகள் ஆதரவற்ற பெண்பிள்ளைகள், மூத்தோர்கள் ஆகியோருக்குக் கைகொடுப்பதாக அமைந்துள்ளது. சைவத்திற்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றியிருக்கக் கூடிய சிவத்தமிழ்ச் செல்வி அன்னை உலகறிந்த பெருந்தகையாக விளங்குகிறார். எனப் புகழாரம் சூட்டினார் யாழ். சின்மயா மிஷன் தலைவர் ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள்.
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி அம்மன் ஆலயத்தின் முன்னாள் பெருந்தலைவர் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் எட்டாவது ஆண்டு குருபூஜை வைபவம் அண்மையில் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அன்னபூரணி மண்டபத்தில் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் இடம்பெற்றது. இதன்
போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இன்றைய காலத்தின் தேவையாகவிருக்கக் கூடிய பல பணிகளை தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம் இன்றும் ஆற்றி வருகிறது. இது அன்னை சிவத்தமிழ்ச் செல்வி அன்று இட்ட வித்து விருட்சமாகியுள்ளதைப் புலப்படுத்துவதாகவுள்ளது.
தன்னுடைய சுயநலம் கருதாது தன்னை முழுமையாகச் சைவத்திற்கும் தமிழுக்கும் அர்ப்பணித்து சிறுவர்கள், இளவயதினர், மூத்தோர்கள், மங்கையர்கள் என அனைத்துத் தரப்பினரதும் நலன் கருதி செயல்பட்டவர் அன்னை சிவத்தமிழ்ச் செல்வி அம்மையார். அம்மையாரால் உருவாக்கப்பட்ட துர்க்கா புரம் மகளிர் இல்லத்தைச் சேர்ந்த மாணவிகள் பல சாதனைகளைப் படைத்து வருகின்றனர். சைவச் சிறுவர்களாக, சிவ மங்கையர்களாக விளங்கும் நீங்கள் அனைவரும் எதிர்காலத்தில் சைவ சமயத்துக்காகவும், அறப் பணிகளுக்காகவும் உங்களை அர்ப்பணிக்கும் சிவத்தமிழ் அன்னையர்களாக மிளிர வேண்டும். அதுதான் நீங்கள் எங்கள் சிவத்தமிழ் அன்னைக்குச் செய்யக் கூடிய உண்மையான குருபூசையாக இருக்க முடியும்.
எங்களுடைய இளம் சமூதாயத்தினர் சைவத்தமிழ்ப் பண்பாட்டுக் கலாசாரத்திலிருந்து, விழுமியங்களிலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கின்றனர். அந்த நிலைமையை இல்லாமல் செய்வதற்கு நாங்கள் அனைவரும் இணைந்து முயற்சிக்க வேண்டும். குறிப்பாக சிறுவர், சிறுமியர்கள் வெள்ளிக்கிழமை தோறும் ஆலயங்களில் பண்ணிசை வகுப்புக்கள், கூட்டுப் பிரார்த்தனைகள், பஜனைகள் என்பனவற்றை ஏற்பாடு செய்து நடாத்த வேண்டும். முன்னுதாரணமாகத் தெல்லிப் பழை துர்க்காதேவி ஆலயத்தில் இந்தச் செயற்பாடு சிறப்பாக இடம்பெறுகிறது. இந்த முன்னுதாரணத்தை அனைத்து இந்து ஆலயங்களும் பின்பற்ற வேண்டும். ஞாயிற்றுக் கிழமை தோறும் அறநெறிப் பாடசாலைகள் மூலம் தியான வகுப்புக்கள், யோகாசன வகுப்புக்கள், அறநெறி வகுப்புக்கள், கலைகளை வளர்த்தெடுக்கக் கூடிய வகுப்புக்களைக் கிராமம் தோறும் நடாத்துவதற்கு ஆர்வமுள்ளோர் முன் வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.