ஞாயிறு, 31 ஜூலை, 2016

துன்பங்களை போக்கும் பைரவர் விரதம்

இந்து சமயத்தில் பைரவர் வழிபாடு முக்கியமானது. சூரபத்மனை அழிப்பதற்காக சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தேன்றியவர் முருகன். பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக சிவனின் தத்புருஷ முகத்தில் இருந்து ஜோதியாக வெளிப்பட்டவர் பைரவர்.
காவல் தெய்வமான இவரும், சிவனைப் போல்
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்து வருகிறார். திரிசூல பாணியான இவர், நீலநிற மேனியுடன், நிர்வாண கோலத்தில் நாய் வாகனத்துடன் காட்சி தருவார். சிவாலயங்களில் வடகிழக்கு திசையில் இவருக்கு தனி சன்னிதி உண்டு. காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்த சாமபூஜை முடியும் போதும் இவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.
பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர். தன்னை நாடி வரும் பக்தர்களின் பாவத்தை போக்குபவர் என்று பொருள். தினமும் வேதனையை அனுபவிப்பவர்கள், தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்கள், அவற்றில் இருந்து விடுபட பைரவரை வழிபடலாம். விபத்து, துர்மர்ணம் இவற்றில் இருந்து காப்பவரும் பைரவரே. அந்த அளவிற்கு பைரவர் முக்கியத்துவம் வாய்ந்தவர்.
பைரவரை தொடர்ந்து வணங்கினால் தீவினைகள் அழியும். எதிரிகள் தொல்லை ஒழியும். யாருக்கும் அடிபணியாத, தலை குனியாத வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பம் நீங்கும். வறுமை நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும். இழந்த பொருள் செல்வத்தை மீண்டும் பெறலாம். திருமணத்தடை அகலும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். பிதுர் தோஷம் விலகும்.
ஒரு காலத்தில் சிவனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. அதேபோன்று பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் உண்டு. இதனால் சிவனை விட தானே சிறந்தவர் என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. உடனே அவர் தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் தன்னையே வணங்க வேண்டும் என ஆணவத்துடன் கூறினார். இதனால் மனம் வருந்திய தேவர்கள் சிவனை தரிசித்து முறையிட்டனர். பிரம்மனின் ஆணவத்தை அடக்க திருஉளம் கொண்ட பரமேஸ்வரன் பைரவரை தோற்றுவித்தார்.
பைரவர், பிரம்மனின் ஒரு தலையை நகத்தினால் கிள்ளி எடுத்து தன் கைகளில் ஏந்தினார். இதனால் பைரவருக்கு பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதைப்போக்க கபால ஓட்டையும், பிரம்மாவின் தலையையும் கையில் ஏந்தியபடி உலகம் முழுவதும் பிச்சை எடுத்த வண்ணம் சுற்றி சென்றார். காசியில் அவர் நுழைந்ததும் அவர் கையில் இருந்த கபாலம் உடைந்தது. அன்று முதல் அங்கேயே இருந்து காசியை பாதுகாக்கும் காவலராக அருள்புரிந்து வருகிறார்.
தட்சன் யாகம் நடத்தியபோது சிவனை அழைக்காமல் அவமதித்தான். இதையடுத்து தட்சனின் மகளான பார்வதிதேவி, அவன் நடத்திய யாக குண்டத்தில் விழுந்து உயிர்விட்டாள். இதையடுத்து ஈசன், தாட்சாயணியின் உடலை கைகளில் ஏந்திய படி ஆவேசத்துடன் அங்கும், இங்கும் அலைந்தார். அப்போது மகாவிஷ்ணு தன் சக்கராயுதத்தால் தேவியின் உடலை பல கூறுகளாக்கினார். அது பூமியில் பல இடங்களில் விழுந்தது. ஒவ்வொரு இடமும் சக்திப் பீடங்களாயின. அவற்றுக்கு பைரவரே பாதுகாவலராக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
ஒரு சமயம் அந்தாகாசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக சிவன் பைரவரை தோற்றுவித்ததாகவும், அவர் விஸ்வரூபம்டுத்து அறுபத்து நான்கு வடிவில் அரக்கர்களை அழித்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது எட்டு பைரவர்களை மட்டுமே வழிபடும் முறை உள்ளது.
அஷ்ட பைரவர்கள், அவர்கள் சக்தி பெயர்கள்:
அசிதாங்க பைரவர் (பிராம்ஹி), குரு பைரவர் (மகேஸ்வரி), சண்டபைரவர் (கவுமாரி), குரோதான பைரவர் (வைஷ்ணவி), உன்மத்த பைரவர் (வராகி), கபால பைரவர் (மகேந்திரி), பீஷண பைரவர் (சாமுண்டி), சம்ஹார பைரவர் (சண்டிகாதேவி).
பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் அஷ்டமி திதி சிறந்தது. அன்று அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். அன்றைய தினம் பைரவரை வழிபட்டால் பொன், பொருள், ஐஸ்வரியம், சுகம் அனைத்தையும் அடையலாம்.
பைரவ வழிபாட்டை முதன் முதலில் தொடங்குபவர்கள் தைமாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்க வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவரை வணங்கி, கால பைரவ அஷ்டக துதி பாடினால் எதிரிகள் தொல்லை அகலும். கடன்சுமை தீரும். எமபயம் நீங்கும்.
ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடைமாலை சாத்தி வழிபட்டால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணப் பேறு கிடைக்கும். கடன் சுமை உள்ளவர்கள், ராகுகாலத்தில் காலபைரவருக்கு முந்திரிபருப்பு மாலைகட்டி, புனுகுசாற்றி, வெண்பொங்கல் நைவேத்தியம் செய்தால் நலம் பெறலாம். சிம்ம ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பானது.
திங்கட்கிழமையில் சிவனுக்கு பிரியமான வில்வ அர்ச்சனை செய்தால் அருள் கிடைக்கும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹரசதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தனக் காப்பிட்டு, புனுகு பூசி, நந்தியாவட்டை மலர் சாற்றி வழிபட கண்நோய் அகலும். கடக ராசிக்காரர்கள் இந்தக் கிழமைகளில் வழிபடலாம்.
எதிர்பாராத விதமாக இழந்து விட்ட பொருளை திரும்ப பெற, பைரவர் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் பலன் கிடைக்கும். மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் வழிபாட்டுக்குரிய நாள் இது. எல்லா அஷ்டமி திதிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி திதி வந்தால் சிறப்பு. குறைந்தது 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால், நல்ல மக்களைப் பெறலாம்.
புதன்கிழமை நெய் தீபம் ஏற்றிவழிபட வீடு, மனை வாங்கும் யோகம் கிடைக்கும். மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய நாள்.
வியாழக்கிழமை பைரவருக்கு விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி, சூனியம் நீங்கி நலம் கிடைக்கும். தனுசு, மீன ராசிக்காரர்கள் வழிபட இந்தக் கிழமை சிறந்தது.
வெள்ளிக்கிழமை மாலையில் பைரவ மூர்த்திக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய நீங்காத செல்வம் வந்து நிறையும். ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் வழிபட ஏற்ற நாளாகும். சனி பகவானுக்கு குரு, பைரவர். ஆகவே சனிக்கிழமையன்று இவரை வழிபடுவதால் சனி தோஷம் விலகி நன்மை கிடைக்கும். மகரம், கும்ப ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய நாள்.
64 பைரவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் தினமும் சாதாரண விளக்கு போடலாம். அது முடியாதவர்கள் ஒருநாள் மட்டும் விளக்கு போடலாம்.
வாழ்க்கையில் வறுமை அகன்று செல்வச்செழிப்போடு வாழ்வதற்கு அருள்பவர் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர். இவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. இவர் அமர்ந்த நிலையில் தன் மடியில் பைரவியை அமர்த்திக்கொண்டு ஒருகரத்தில் அமுத கலசமும், ஒரு கரத்தில் சூலமும் ஏந்தி, வைர கிரீடம், பட்டு வஸ்திரம் அணிந்து தம்பதி சமேதராய் காட்சி அளிக்கிறார்.
இவரை அஷ்டமி திதி மற்றும் பவுர்ணமி நாளில் வழிபடலாம். மேலும் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் வணங்கினால் சகல சம்பத்தும், பொன்பொருளும் கிடைக்கும். அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால், காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசுநெய் இவற்றினை தனித்தனியாக அகல் தீபமாக ஏந்திவர நற்பலன் கிட்டும்.
தினமும் பைரவர் காயத்திரியையும், பைரவி காயத்திரியையும் சொல்லி வந்தால் செல்வம் பெருகும். கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வைக்கும் போது, அது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது என்கிறது பைரவ புராணம்.
கார்த்திகை மாதம் தேய்ப்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இதனை காலபைரவாஷ்டமி என்பர். இது பைரவரை தேவர்கள் பூஜிக்கும் நாள். அன்று பைரவர் வழிபாடு நற்பலன்களை தரும். தைமாதம் முதல் தொடங்கி ஒவ்வொரு செவ்வாய், சனிக்கிழமையும் பைரவருக்கு பஞ்சதீபம் ஏற்றி, காலபைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் அழிவர். கடன்கள் தீரும். எமபயம் விலகும்.
எமதர்மனும், சனியும் சூரியபகவானின் மகன்கள். இதில் எமதருமர் அழகானவர். சனி ஊனமானவர். இதனால் எமன் அவரை அலட்சியப்படுத்தினார். மன வேதனை அடைந்த சனி, தனது தாயார் சாயா தேவியிடம் சென்று வருத்தப்பட்டார். அவர், ‘நீ!பைரவரை உள்ளன்போடு வழிப்பட்டு வா!. அவர் நல்வழி காட்டுவார்’ என்றார். தாயாரின் அறிவுரைப்படி சனி பைரவரை வழிப்பட்டு வந்தார். இதனால் மனமகிழ்ந்த பைரவர் சனியின் பெருமையை உலகத்திற்கு எடுத்துக்காட்ட அவருக்கு ஈஸ்வரன் பட்டம் அளித்தார். மேலும் நவக்கோள்களில் சக்தி மிக்கவராக ஆக்கினார். ஆகவே சனீஸ்வரனின் குருநாதரான பைரவரை வழிபட்டால் ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஜென்மச்சனி, அர்த்தாஷ்டமச்சனி போன்ற தோஷங்கள் விலகி விடும்.
பைரவருக்கு சிறு துணியில் மிளகை கட்டி நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வழிபட்டால், வாழ்க்கையில் வளம் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபட்டால் ஆரோக்கிய வாழ்வு அமையும். சந்தனக்காப்பு செய்து வழிபட்டால், எந்நாளும் இன்ப நாளாக அமையும். பைரவருக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லம், பாயசம், அவல் பாயசம், உளுந்தவடை, சம்பா அரிசி சாதம், பால், பழ வகைகள் பிடித்தமானவை. அவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.