ஞாயிறு, 31 ஜூலை, 2016

கீரிமலையின் புனித இடங்களில் வழிபட அனுமதிக்குமாறு கோரிக்கை

புனித ஆடி அமாவாசை விரத நாளன்று கீரிமலையின் புனித இடங்களில் வழிபட அனுமதிக்குமாறு சைவ மகாசபை கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்துக்களின் ஆன்மீக ஈடேற்றத்துக்காக
பிதிர்க்கடன் செலுத்தி பக்திபூர்வமாக கடைப்பிடிக்கும் விரதமே ஆடி அமாவாசை.
இதனை கடைப்பிடிப்போர் அன்றைய தினம் உணவை சுருக்கி கீரிமலை தீர்த்தக்கரையில் தமது முன்னோர்க்கு சிரார்த்த கடனை செய்து அருகில் உள்ள நகுலேஸ்வரர் ஆலயத்திலும் அதற்கு அருகில் தற்போது விடுவிக்கப்படாமல் உள்ள பாதாள கங்கை எனப்படும் ஆதி நகுலநாதன் ஆலயம் அமைந்திருந்த திருத்தம்பேஸ்வரத்திலும், சடையம்மா மட புவனேஸ்வரி அம்மன் ஆலயத்திலும் ஈழத்து திருச்செந்தூர், உச்சிப்பிள்ளையார், கிருஸ்ணன்கோவில் ஆலயத்திலும் வழிபாடு மேற்கொள்வது தொன்று தொட்டு வரும் வழமையாகும்.
கீரிமலைப் பகுதியில் தற்போது பல இடங்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் சில மீற்றர் தூரத்துக்கு உட்பட்ட ஆலயங்களில் சைவ மக்கள் தமது புனித கடமையை மேற்கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதன் மூலம் நல்லாட்சியை நிலைநாட்டும் கொள்கையுடைய இந்த அரசு குறித்த விடயம் தொடர்பாக சாதகமான நிலைப்பட்டை மேற்கொள்ளுமாறு சைவ மதத்தவர் சார்பாக வேண்டுகிறோம் என்றுள்ளது.