வியாழன், 4 ஆகஸ்ட், 2016

நல்லூர்க் கந்தன் மஹோற்சவ ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின்
கொடியேற்ற உற்சவம் எதிர்வரும்-08 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் முன்னாயத்த ஏற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(08) முற்பகல் 10.30 மணி முதல் மாநகரசபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
விதித்த தடைகளில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாநகர சபையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், தொண்டு நிறுவன உதவியாளர்கள் அனைவரும் பக்தர்களுடன் பண்பாகவும், பணிவாகவும், உதவு மனப்பான்மையுடனும் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்த விரும்புகிறோம். பொதுமக்களும், அடியார்களும், வியாபாரிகளும், கடமையில் ஈடுபடும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் நட்புடன் ஒத்துழைக்கும் படி கேட்டுக் கொள்கின்றோம்.
ஆலயச் சூழலில் 20 மைக்றோனுக்குக் குறைந்த தடிப்புள்ள பொலித்தீன் பாவனையை நாங்கள் முற்றாகத் தடை செய்துள்ளோம். அதேவேளை, ஏனைய பொலித்தீன் வகைகள், பிளாஸ்ரிக் பொருட்கள், ரெஜிபோம் வகையான பொருட்கள் என இலகுவில் உக்காத பொருட்களை இயலுமானவரைப் பாவிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வியாபாரம் மேற்கொள்ளவுள்ளோரிடமும், ஏனைய அனைவரிடமும் நாம் வேண்டுகோளாக விடுக்க விரும்புகிறோம். ஆலயத்தைச் சூழவுள்ள அனைத்து வீதிகளிலும் பக்தர்கள் எவ்வேளையும் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருப்பார்கள் என்பதால் அனைத்து வாகனங்களும் வேகமாகச் செல்வத்தைத் தவிர்க்கவும். அடியார்கள் அங்கப் பிரதட்ஷணம் செய்வதற்கு வசதியாக ஆலய வெளிவீதிப் பகுதியில் மணல் பரவ உள்ளோம். அந்தப் பகுதியில் வாகனம் செலுத்துதல், துப்புதல், அசிங்கப்படுத்துதல், பாதணிகளுடன் உட்செல்லுதல் என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிருமித் தொற்றுப் போன்ற சுகாதாரம் சம்பந்தமான பாதிப்புக்களைத் தவிர்க்க முடியும்.
ஆலயச் சுற்றாடலில் மணல் பரவும் நடவடிக்கைகள் எதிர்வரும்-05 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். ஆலயத்தைச் சூழவுள்ள வீதிகள் துப்பரவு செய்யப்பட்டுள்ளதுடன், உடைந்த வீதிகள் செப்பனிடப்பட்டுமுள்ளது.
ஆலயத்திற்கு வருகை தரும் அடியார்கள் அனைவரும் கலாசார உடையணிந்து வருமாறு கேட்டுக் கொள்வதுடன், ஆலயத்திற்கு வருகை தரும் அடியார்கள் தங்கள் பாதணிகளைப் பொருத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளவும். ஆலயத்திற்கு அண்மையில் முதலாவதாகக் காணப்படும் வீதித் தடைக்கும் வெளிப் பக்கமாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அடியார்களின் வசதிக்காக மாநகர சபையால் அமைக்கப்பட்டிருக்கும் மலசலகூடம் மற்றும் ஆடை மாற்றும் பகுதிகளைத் துப்பரவாக வைத்துக் கொள்ளுங்கள். அவசர தேவைகள் நிமித்தம் ஆலயத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியைப் பெற்றுக் கொள்ள முடியும். அடியார்கள் கோவிலுக்கு வரும் போது தங்களது ஆபரணங்கள் தொடர்பாக அவதானத்துடன் செயற்படவும். மாநகர சபையின் உற்சவ காலப் பணிமனையொன்று ஆலயத்தின் வடக்கு வீதியில் அமையவுள்ளது. அந்த அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு அடியவர்கள் தங்களது முறைப்பாடுகளைத் தெரிவிப்பதுடன் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் யாழ். மாநகர சபையின் ஆணையாளருடன் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி-சிவதாஸன், மாநகர சபையின் பிரதம பொறியியலாளர் ஆர். சுரேஷ்குமார், மாநகர சபையின் பொதுசனத் தொடர்பு உத்தியோகத்தர் எஸ். லோகசிவம் ஆகியோரும் உடனிருந்தனர்.