சனி, 27 ஆகஸ்ட், 2016

சுவிற்சர்லாந்து பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் ஆலயத் தேர்த் திருவிழா

சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ன் மாநிலத்தில் 2007ம் ஆண்டு முதல் திருவருளால் அமையப் பெற்ற அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் 01. 02. 2015 முதல் நிதலாயன இடத்தில் ஐரோப்பாத் திடலில் பல்சமய இல்லத்தின் அருகில் இராஜகோபுரத்துடன்
தனிக்கோவிலாக, நால்வர் பெருமக்கள் செந்தமிழ் ஓதும் திருக்காட்சியுடன் திருவருளால் செந்தமிழ்த் திருக்குடமுழுக்கு கண்டு நிறைந்துள்ளது.
இப்பெரும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் வெம்முக ஆண்டுத் திருவிழா பெருவிழாவாக எட்டுத் திக்கும் செந்தமிழ் ஓதக் கடந்த 18. 08. 2016 வியாழக்கிழமை முதல் ஞானக்கோ ஐங்கரப்பெருமான் வழிபாட்டுடன் தொடங்கப்பெற்று நாளும் பல சிறப்புத் திருவிழாக்கள் நடைபெற, இயற்கையும் அன்பும், சிவக் கொள்கை முடிவான சைவசித்தாந்த தத்துவமும் உள்ளும் புறமும் ஒளிரத் திருவிழா சிறுவர்களையும் பெரியவர்களையும் கூட்டி நற்தமிழ்ச் சமூகப் பொதுநிகழ்வாக நாளும் மிளிர்ந்து வருகிறது.

கடந்த 26. 08. 2016 வெள்ளிக்கிழமை சப்பறத் திருவிழா மிகு சிறப்பாக நடைபெற்றது. ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அனைத்து உயிர்களுக்குமாக விளங்கும் திருக்கோவில் ஆகும்.
அதே நேரம் இத்திருக்கோவில் அடியார்களும் நன்கொடை வழங்கிய தொண்டர்களும் ஈழத்தைச் சேர்ந்த தமிழ்மக்கள் ஆவர். இதன் அடிப்படையில் தாயகத்தை விட்டுப் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் மக்கள் தங்கள் வேரினை மறவாதிருக்கு ஈழத்தின் வரைபடம் சப்பறத்தின் கோபுரமாக மாறியிருந்தது.
இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் இடங்களை இளையவர்கள் அறிந்துகொள்வதுடன், புலம்பெயர் வாழ்வில் தாய்நாட்டின் அடையாளத்தை இளையோர்களுக்கு நெருக்கமாக அறியச் செய்யும் செயலாக இது அமைந்திருந்தது.
27. 08. 2016 சனிக்கிழமை காலை 06.00 மணிமுதல் செந்தமிழ்ச் சடங்குகள் தொடங்கப்பெற்று, திருமுழுக்காடி எமையாளும் பெருமான் ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருத்தேர் புறப்பாடு தொடங்கியது.
திருச்சடங்குகளைத் தொடர்ந்து ஐம்பெரும் புராணங்கள் ஓதப்பெற்று, திருமறைகளுடன் உலகப்பொது மறை திருக்குறள் வள்ளுவன் பாடசாலை மாணவர்களால் ஓதப்பட்டு, ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலால் ஈழத்தில் வெளியிடப்பட்ட பாடலிற்கு இளந்தமிழ் மாணவி ஆடல் வழங்க முத்தமிழ் தன் திருச்செவிகேட்டுக் குளிர்ந்து பெருமான் தேருக்குப் புறப்பட்டார்.
ஒரு தேரில் அம்மை அப்பன் புறப்பட்டு வரும் வழமை இதுவரை இருந்தது. இம்முறை ஐங்கரப்பெருமான், ஐயப்பன், முருகப்பெருமான் ஒருதேரில் வலம் வர, அம்மை அப்பன் தனித்தேரில் எழுந்தருளினர், நிறைவில் சிவ சினத்தின் வடிவான சட்டிகேச்சுரர் இளையவர்களால் தேர்வடிவிலான பல்லக்கில் காவப்பெற்று திருநடையாக வலம் வந்தார்.
ஐரோப்பாத் திடல் வந்தடைந்த தேரில் அம்மையப்பனும், ஞானலிங்கேச்சுரம் வாழும் தெய்வங்களும் அடியார்கள் வேண்டும் வரமளிக்கும் அருச்சனை தமிழில் செந்தமிழ் திருக்குருமார்களால் ஆற்றப்பட்டது.
பெண்கள் தீச்சட்டி ஏந்திவர, இளையோர் தமிழ்க் காவடிகள் ஆடிவர சைவத்தமிழ் சுவிற்சர்லாந்து பேர்ன் நகர் ஐரோப்பாத்திடலில் கமழ்ந்தது.
தேர் வலம் வந்த பாதைகள் முழுவதும் தமிழ் மக்களின் பாரம்பரிய உணவு, ஆடை அமைந்த அங்காடிகளும், சிற்றுண்டி நிலையங்களும் தாயகத்தின் உணர்வினை திருவிழாவில் உணரச் செய்தது.
தேர் இருப்பிடம் வந்தடைந்ததும் ஐரோப்பாத் திடலில் இயல் இசை நாடகம் என முத்தமிழ் நிகழ்வுகள் இளந்தமிழ்ச் செல்வங்களால் நடாத்தப்பட்டன. நிகழ்வு ஒருபுறம் நடைபெற ஆறு சுவை உணவு அருளமுதாக வழங்கப்பட்டது.
14.30 மணிக்கு எம்பெருமானிற்கு பச்சை அணியப்பட்டு, அடியார்கள் பன்னீரால் நீராட்ட ஞனாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் தேரில் இருந்து இறங்கி வந்த காட்சி இம்மண்ணில் பெருமான் திருவிறங்கிய காணொளியாக விரிந்தது. அம்பலத்தில் ஆடும் பெருமான் ஞானலிங்கேச்சுரத்தில் ஆடிவந்து இருப்பிடம் அடைந்தார்.
28. 08. 2016 ஞாயிற்றுக்கிழமை காலை திருமுழுக்குத் (தீர்தத்திருவிழாவும்) திருவிழா நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை திருக்கொடியிறக்கமும் நடைபெறும்.
29. 08. 2016 திங்கற்கிழமை தெய்வத் திருமணச் சடங்கும் (திருக்கல்யாணம்) நடைபெறும்.
30. 08. 2016 செவ்வாய்க்கிழமை அயன் தலை கிள்ளி சிவன் பணி செய்த திருவடுபெருமானிற்று நன்றி செலுத்தும் வைரவர் மடை நடைபெற்று ஞானலிங்கேச்சுரர் திருவிழா நிறைவுறும்.