வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

பொன்னாலை வரதராஜப் பெருமாள் இரதோற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி இரதோற்சவம் நேற்று வியாழக்கிழமை மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
அதிகாலையில் ஆரம்பமாகிய விசேட பூசைகளைத்
தொடர்ந்து முற்பகல் 10.30 மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்றது. தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா ஒலி வானைப் பிளக்க நண்பகல் 12.00 மணியளவில் இரதமேறிய ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத வரதராஜப் பெருமாள் வெளிவீதி வலம்வந்து அடியார்களுக்கு அருள் பாலித்தார்.
அங்கப்பிரதட்சணை , அடியளித்தல், தூக்குக்காவடி, ஆட்டக்காவடிகள், கற்பூரச்சட்டி எடுத்தல் போன்றவற்றைச் செய்து பக்தர்கள் தமது நேர்த்திகளை நிறைவேற்றினர்.
இரதம் பகல் ஒரு மணிக்கு இருப்பிடத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து 1.30 மணியளவில் உறியடி உற்சவம் இடம்பெற்றது. பச்சை சாத்தப்பட்ட வரதராஜப் பெருமாள் தேரில் இருந்து 2.30 மணியளவில் அவரோகணித்தார். இன்றைய இரதோற்சவத்திற்கு வருகை தந்த பக்தர்களின் நன்மை கருதி ஆலயச் சூழலில் இருந்த மடாலயங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. தாகசாந்தி நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அயற்பாடசாலைகளில் இருந்து வருகை தந்த சாரணர்களும் ஆலயத் தொண்டர்களும் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வட்டுக்கோட்டை பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டனர். -