திங்கள், 2 ஏப்ரல், 2018

சின்ன திருப்பதி... கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனித் தேரோட்டம்!

அரியலூர் மாவட்டம்  கல்லங்குறிச்சி, கலியுகவரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
                             
தமிழகத்தின் சின்ன திருப்பதி என்று அழைக்கப்படும், கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் பங்குனிப் பெருந்திருவிழா கடந்த மார்ச் 25-ம் தேதி துவஜாரோகணம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நாள்களில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன்  பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. 
                                 

7-ம் நாள் விழாவில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையடுத்து வெண்ணெய்த்தாழி உற்சவமும் மாலையில் வெள்ளிக்குதிரை வாகன வீதி உலா நடைபெற்றது. பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.  வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் "கோவிந்தா ..கோவிந்தா..." என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாகச் சிறிய தேரில் ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று நிலையத்தை வந்தடைந்தது. இதில் 50,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
                                                        
இவ்வருடம் விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்க வேண்டும் என்று பெருமாளை வேண்டி விவசாயிகள் தங்களது வயல்களில் விளைந்த நெல், கம்பு, சோளம், பருத்தி மற்றும் மிளகாய் உள்ளிட்ட தானியங்களைக் காணிக்கையாக அளித்தனர். ஏகாந்த சேவை நாளை நடைபெற உள்ளது. தேரோட்டத்தையொட்டி சேலம், கோவை, கள்ளக்குறிச்சி, கடலூர், விருத்தாசலம், சென்னை, திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், கும்பகோணம், திருவையாறு உள்ளிட்ட தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்களின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தேரோட்டத்தை முன்னிட்டு அரசுப் பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் தவிர மற்ற பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று மட்டும் ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது