சனி, 17 மார்ச், 2018

பங்குனி உத்திரம் பற்றிய பார்வை

ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவது வழக்கம். ஆனால் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களை விட அதிக மகத்துவமும், முக்கியத்துவமும் உண்டு. தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என புராணங்கள் விவரிக்கின்றன.

மேலும் தமிழில் 12வது மாதம் பங்குனி. அதேபோல் நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்திரம். அதாவது 12-வது மாதமான பங்குனியும் 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் அற்புதமான நாள் பங்குனி உத்திரம். இந்த தினத்தின் சிறப்புகள் அதிகம். அவற்றை நோக்குவோம்

ஸ்ரீராமபிரான்-சீதாதேவி, பரதன்-மாண்டவி, லட்சுமணன்-ஊர்மிளை, சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் பங்குனி உத்திரம். முருகப் பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். ஸ்ரீவள்ளி அவதரித்த தினமும் இதுதான் என்கிறது புராணம். தேவேந்திரன், இந்திராணி திருமணம் நடைபெற்ற நாள் எனவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த நாளில் விரதம் மேற்கொண்ட சந்திரன், அழகு மிக்க 27 கன்னியரை மனைவியாகக் கொண்டதாகவும், விரதம் மேற்கொண்ட ஸ்ரீமகா லட்சுமி, விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பாக்கியத்தைப் பெற்ற நாளாகவும் புராணங்கள் கூறுகின்றன. மேலும் ஸ்ரீபிரம்மா, தன் நாவில் சரஸ்வதியை வரித்துக் கொண்ட தினம், பங்குனி உத்திரம் என்பர். ஐயன் ஐயப்ப சுவாமியின் முந்தைய அவதாரமான சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில் என்கிறது சாஸ்தா புராணம். அர்ஜுனன் அவதரித்தது, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்-ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த திருநாள் பங்குனி உத்திரம் என்கிறது ஆண்டாள் புராணம்.

அத்துடன் தனது தவத்தைக் கலைத்த மன்மதனை சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர் தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு மனமிரங்கிய சிவபெருமான், மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்தருளினார். அது பங்குனி உத்திர திருநாளில்தான் என்கிறது சிவபுராணம். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக் கோலத்தில் பரமேஸ்வரன் பார்வதிதேவியுடன் காட்சி தந்தது இந்த நாளில்தான். காரைக்கால் அம்மையார் பங்குனி மாதத்தில்தான் முக்தி பெற்றார். இவ்வாறான பல சிறப்புக்கள் இந்த பங்குனி உத்தரத்திற்கு உண்டு.

எனவே இந்த பங்குனி உத்தர பூஜையைகளை ஆலயங்களில்  தரிசித்தால் எல்லா வளமும் பெறலாம் என்கின்றனர் சிவாச்சார்யர்கள். மேலும் சந்திர தோஷம் யாவும் நீங்கிவிடும் எனவும் சந்திர பலம் கொண்டு மனோபலம் கிடைக்கப் பெற்று மனத்தெளிவுடன் வாழலாம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.