வெள்ளி, 23 மார்ச், 2018

பங்குனி உத்திர திருவிழா பழநி கோயிலில் நாளை கொடியேற்றம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா, நாளை திருஆவினன்குடி கோயிலில் காலை 11 - 12 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. பகல் 12. 30 மணிக்கு வள்ளி - தெய்வானை சமேதரராக, சப்பரத்தில் பட்டக்காரர் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 29ம் தேதி இரவு 7 - 8. 30 மணிக்குள் நடக்கிறது.
பின்பு முத்துக்குமாரசாமி வள்ளி - தெய்வானை மணக்கோலத்தில் வெள்ளி ரதத்தில் சன்னதி வீதி மற்றும் கிரி வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

முத்திரை நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் மார்ச் 31ம் தேதி நடக்க உள்ளது. பகல் 12. 45 மணிக்கு மேல் தேர் ஏற்றமும், மாலை 4. 45 மணிக்கு மேல் கிரிவீதிகளில் தேரோட்டமும் நடைபெறும்.
விழா நடைபெறும் 10 நாட்களும் சுவாமி தந்தப்பல்லக்கு, தங்கக்குதிரை, தங்கமயில், வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சியும், குடமுழுக்கு நினைவரங்கில் பக்தி சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வரும் 28ம் தேதி முதல் ஏப். 1 வரை 5 நாட்கள் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட உள்ளது.
ஏப்.
2ம் தேதி முதல் வழக்கம் போல் தங்கரத புறப்பாடு நடைபெறுமென கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.