வியாழன், 22 மார்ச், 2018

விநாயகர் திருத்தலங்களில் முதன்மைத் தலமாக விளங்கும் மானிப்பாய் மருதடி விநாயகர்

ஈழத்திருநாட்டில் விநாயகர் திருக்கோவில்களில் முதன்மைத் தலமாக விளங்குவது மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம். தமிழ் வேந்தர் காலத்துத் திருத்தலங்களிலொன்றாகப் போற்றப்படும் இத்தலம் பற்றிய பல்வேறு ஜதீகவரலாறுகள் கூறப்படுகின்றது. அருட்சிறப்பும் அற்புதமும் நிறைந்த மருதடி வினாயகர் ஆலயம் தனியாரின் பராமரிப்பில் பராமரிக்கப்பட்டு சென்ற நூற்றாண்டில் பொதுக்கோவிலாகப் பிரகடனம் செய்யப்பட்டு பொதுமக்களால் தற்போது நிர்வகிக்கப்பட்டு வருகிறது. காலம் தவறாத பூசை வழிபாட்டு ஒழுங்கு திருப்பணி வேலைகள் அறநெறிப்பாடசாலை  ஆலயநிர்வாகம் என மிகவும் சிறப்பாக ஆலயத்தை நிர்வகித்து வருகின்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க மருதடி விநாயகர் ஆலயத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான வருடார்ந்த மகோற்சவம் 22.03.2018 வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 தினங்கள் மிகச்சிறப்பாக இடம்பெறவுள்ளது.
மின்னும் மருதடி வாழ் வேழமுகன் றாள் பணிந்து
பன்னுவவன் காதை பகர்ந்திடவே – மன்னுபுகழ்
நீட்டு மலைமேல் றிகழ்பா ரதம்வரைந்த
கோட்டுமுகன் பாதங் குறி
என்று போற்றுகின்ற மருதடி விநாயகரின் அற்புதத்தினை காண பல்லாயிரக்கனக்கான அடியவர்கள் மகோற்சவ காலத்தில் எம்பெருமானின் சந்நிதானத்திற்கு அலைஅலையாக திரண்டு வருவார்கள். ஆண்டு தோறும் சித்திரை மாதம் புதுவருடப் பிறப்பன்று பல லட்சம் பத்தர்கள் புடைசூழ விநாயகப் பெருமானின் திருத்தேர்த் திருவிழா மிகச் சிறப்பாக  நடைபெறும்.  மகிமை மிக்க மருதடியான் திருவருளைப் பெறுவதற்காக பல ஊர்மக்களும் நேர்த்திகளை நிறைவேற்ற இத்தலத்தை நோக்கி தினமும் வருவர்.
இவ்வாலயத்தில்  மூன்றுகாலப் பூசைகள் காலந் தவறாது நடைபெறுகின்றன.ஒவ்வொருமாதத்திலும் அமாவாசையையடுத்துவரும் சதுர்த்தி திதியில் விநாயகப்பெருமானுக்கு விஷேடபூசைகள் நடைபெறும் ஆவணி சதுர்த்தி தினமானது பெருமானது திருசந்திதானத்தை பார்ப்பவர் கண்களை பூரிக்கச்செய்கின்றது.இச்சதுர்த்தி ‘தேவர்கள் முனிவர் சித்தர் கந்தருவர் யாவரும் வந்திவனேவல் செய்திடும்நாள்’ ஆக போற்றப்படுகின்றது. கார்த்திகை மாதத்தில் விநாயகவிரதம் ஆரம்பமாகி இருபத்தொருநாட்களாய் பிள்ளையார்கதை வாசிக்கப்பட்டு கடைசிநாளிலே கஜமுகாசூரசங்காரம் நடைபெறுவது இவ்வாலயத்தின் சிறப்புக்களில் ஒன்று.
மருதமரத்துப்  பிள்ளையார்  வருசத்திலே பங்குனிமாதத்தில் உற்சவம் ஆரம்பமாகி தமிழ்ச்சித்திரைப்புத்தாண்டு தினத்தன்று இரதோற்சவமாகக் கொண்டு ஆரம்பகாலத்தில் இருந்து 2004 ஆம் ஆண்டு வரை பதினெட்டு நாட்கள் உற்சவமும் 2004 உற்சவத்தையடுத்து புனரமைப்புச் செய்வதற்காக முற்றாகத் தகர்த்தப்பட்டு மீண்டும் 2014ஆண்டு புதுபொலிவுபெற்று 48 நாட்கள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று அதனையடுத்து 25 நாட்களாக உற்சவ நாட்கள் மாற்றம்செய்யப்பட்டு 25 நாட்கள் மகோற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.
மகோற்சவ காலங்களில் மெய்யடியார்கள் காவடி எடுத்தல் தீச்சட்டியெடுத்தல் அங்கப்பிரதட்சணம் செய்தல் அடியழித்தல் அள்ளுகாசும் தென்னம்பிள்ளையும் வழங்கல் பிள்ளை விற்று வாங்கல் மடிப்பிச்சை எடுத்தல் பட்டுச் சார்த்தல் தேவாரம் ஓதுதல் வடம்பிடித்தல் முதலான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்.இக்காலத்தில் புராண படனம் செய்தல் சமயப் பிரசங்கம் செய்தல் திருமுறைகள் ஓதுதல் ஓதுவார்களை அழைப்பித்து ஓதுவித்தல் முதலான சமய நிகழ்ச்சிகள் மக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக நடத்தப்படுகின்றன.மருத மரத்தடியில் வீற்றிருந்து எம்பெருமான் வேண்டும் அடியவர்கு வேண்டும் வரங்களினை வழங்கிக் கொண்டிருக்கின்றான்.
பூவாழி மன்னர்மநு நீதி வாழி
புகலரிய மடமகளீர் நிறையும் வாழி
ஆவாழி அந்தணர்தங் கூட்டம் வாழி
அருமறைவே தாகமங்கள் புராணம் வாழி
ஓவாத தவங்கருணை விரதம் வாழி
உலகிலுள்ள சாரசரங்க ளனைத்தும் வாழி
மாவாழும் பிள்ளையார் திடரில் வாழும்
மருதடியிற் கணபதிதாள் வாழிவாழி.
என்று மகோற்சவ காலத்தில் எம்பெருமாகிய விநாயகரினை வாழ்த்தி   எம்பெருமானிடத்திலே மெய்யுருகி வழிபாடாற்றி சைவர்களாக சைவ வாழ்வு வாழ்ந்து இம்மை மறுமைப் பயன்களினை நாம் பெற்றுய்வோமாக
சைவப்புலவர் சொல்லின்பநாயகன் எஸ்.ரி.குமரன்
செயலாளர்
அகில இலங்கை சைவப்புலவர் சங்கம்.